5396. அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
வெப்பூறு நீக்கிய வெண்ணீறு பூத்தபொன் மேனியனே
உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
உரை: கங்கையாறு தங்கிய சிவந்த சடையையுடைய அப்பனாகிய சிவனே! திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்றவனே! பவளம் போலும் நிறத்தையுடைய செழுமையான சுடரும் ஒப்பற்ற சோதியும் உடையவனே! பாண்டியனுக்கு குற்றவெப்புறுவை நீக்கிய வெண்ணீற்றை அணிந்த பொன் போலும் மேனியை உடையவனே! உப்பு கரிக்கின்ற வாய்க்கு இனிப்பை உண்டாக்கிய உத்தமனே! வணக்கம். எ.று.
அப்பு - தண்ணீராகிய கங்கை. பவளம் போலும் திருமேனியை உடையவனாதலால் சிவனை, “துப்பூறு வண்ணச் செழுஞ்சுடரே” என்று போற்றுகின்றார். திருஞானசம்பந்தரால் வெண்ணீறு பூசிப் பாண்டியனுக்குண்டாகிய வெப்பு நோயைப் போக்கியதால், “வெப்பூறு நீக்கிய வெண்ணீறு” என்று சிறப்பிக்கின்றார். உலகியல் நுகர்வுகளை விலக்கித் திருவருள் இன்பத்தை நல்கினமையால், “உப்பூறு வாய்க்குத் தித்திப்பூறு காட்டிய உத்தமனே” என்று உரைக்கின்றார். (101)
|