5397. நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
உரை: நான் செய்துள்ள புண்ணியத்தை என்னென்று சொல்லுவேன்; அம்பலத்தில் எழுந்தருளுகின்றதாகிய பெருமை பொருந்திய பெரிய மாணிக்க மணியாகிய சிவபெருமானை என்பால் எய்தப் பெற்று நல்வாழ்வு பெற்றுள்ளேன்; ஊனாலாகிய என் தேகம் ஒளி பொருந்திய வடிவுடையதாகப் பெற்று ஓங்குகின்றேன்; அருளரசாகிய சிவபெருமான் எனக்குச் செய்த வித்தையை அறிய வல்லவர்கள் யாவர் உளர்? உலகத்தீரே இதனை யறிந்து சொல்லுவீர்களாக. எ.று.
மாணிக்க மணியின் நிறத்தை உடையவனாதலின் சிவபெருமானை, “மாமணி” என்று புகழ்கின்றார். ஊன் செய்த தேகம் - ஊனாலாகிய உடம்பு. வித்தை - அற்புதமான செயல். குணித்தல் - ஆராய்ந்தறிதல். நல்வாழ்வும் ஒளி வடிவும் பெற்றதினால் பெருமகிழ்வுற்று, “நான் செய்த புண்ணியம் என்னுரைக்கேன்” என்று வியந்து கூறுகின்றார். (102)
|