5398.

          பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
          டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
          தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
          நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே

உரை:

     இந்த நிலவுலகில் நான் செய்துள்ள புண்ணியத்தை என்னவென்று சொல்லுவேன்; நான் செய்த சிவபூசை நிறைந்து விட்டது; திருச்சிற்றம்பலத்தில் நிகழ்கின்ற திருநடம் கண்டதினால் யான் எண்ணிய எண்ணங்களும் பயனளித்து விட்டன; மெய்யான திருவருள் இன்பமும் எனக்குக் கிடைத்துவிட்டது; குளிர்ந்த இயல்புடைய திருவருள் ஞான அமுதத்தை உண்டு இன்புற்றேன்; எனக்குச் சாமியாகிய சிவனையும் கண்ணாரக் கண்டு கொண்டேன். எ.று.

     பூசை - சிவபூசை. சிவபூசையால் விளையும் நலங்கள் தமக்கு உண்டாயின என்றற்கு, “பண்ணிய பூசை நிறைந்தது” என்று பகர்கின்றார். உலகியல் இன்பம் போலாது திருவருள் ஞான இன்பம் நிலைத்த சிறப்புடையதாதலால் அதனை, “மெய்யின்பம்” என்று விளக்குகின்றார். திருவருள் ஞான இன்பம் தட்பமும் நிறைவும் உடையதென்பது பற்றி, “தன்னியல் ஆரமுது” என்று குறிக்கின்றார். சாமி - தலைவன்.

     (103)