5399.

          அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
          அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
          அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
          அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.

உரை:

     அருட் பெருஞ் சோதியை நான் பெற்றதினால் திருவருள் சத்தியாகிய அம்மையோடு சிவஞானமும் சிவானந்தமும் எனக்கு உண்டாகும்; அருட் பெருஞ் சோதியாகிய என்னுடைய அப்பன் என்பால் கொண்ட அன்பினால் அருட்பெருஞ் சோதியாகிய தெளிந்த ஞான அமுதினை எனக்குத் தந்தருளி அழிவில்லாததாகிய திருவருள் செங்கோலையும் எனக்குத் தந்துள்ளான்; இந்த அற்புதத்தை என்னென்று சொல்லுவது. எ.று.

     இதனால் அருட்பெருஞ் சோதி ஆண்டவனது அருள் நலத்தை எடுத்தோதி மகிழ்கின்றார். அம்மை - சிவகதியாகிய உமாதேவியின் திருவருள். அருட்பெருஞ் சோதியாகிய திருமந்திரத்தை நாம் பலகாலும் ஓதியதால் சிவபெருமான் என்பால் அன்புற்று என் உள்ளத்தில் எழுந்தருளித் திருவருள் ஞான அமுதத்தை எனக்கு வழங்கித் திருவருள் ஞான நீதியை மேற்கொள்ளச் செய்தருளினான். திருவருள் அரசு நிலைபெற்ற தன்மை யுடையது என வற்புறுத்தற்கு, “அழிவற்றதோர் செங்கோலும் கொடுத்தனன்” என்று கூறுகின்றார்.

     (104)