கல
கலிவிருத்தம்
5400. அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
உரை: அருட்பெருஞ் சோதியாகிய பரம்பொருள் என் உள்ளத்தில் தங்கி ஓங்கினவாற்றால் உலகியல் விளைவிக்கும் மயக்கமாகிய திரை யெல்லாம் கெட்டு நீங்கின; இருள் செய்யும் பெரிய மனத்துன்பங்கள் யாவும் என்னை விட்டு நீங்கின; தெளிவு தருகின்ற பெரிய சித்திகளும் எனக்கு எய்திவிட்டன. எ.று.
திருவருள் ஞானத்தை இங்கே “அருட்பெருஞ் சோதி” என்று தெரிவிக்கின்றார். உலகியல் மாயை உயிரறிவை மருட்டிப் பெரிய திரையிட்டது போல மெய்யறிவைத் தடுத்து நிற்பதால் அதனை, “மருட் பெரும் திரை” என்று உரைக்கின்றார். இருளைச் செய்யும் ஆணவ மலம் முதல் மும்மலங்களும் நீங்கினமை விளங்க, “இருட் பெருமலம் முதல் யாவும் தீர்ந்தன” என்று தெரிவிக்கின்றார். தெருள் - தெளிவு. பெருஞ் சித்திகள் - கன்ம யோக ஞான சித்திகள். (105)
|