5401. ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
உரை: என்னுடைய நெஞ்சமே! நீங்குதலின்றி வருத்தத்தைச் செய்கின்ற நம்முடைய உடம்பு தானும் எக்காலத்தும் சாதலின்றி இன்பமே எய்தி நாம் வாழலாம்; பெருமை பொருந்திய சுத்த சன்மார்க்க நன்னெறியை மேற்கொள்ளாதவர்களைச் சேர்தல் ஒழிக. எ.று.
உடம்பினுள் நீங்காமல் இருந்துகொண்டு எப்பொழுதும் நோய் செய்வதால் உடம்பை, “ஓவுறாத் துயர் செய்யும் உடம்பு” என்று இகழ்கின்றார். என்றும் சாவுறாது - எக்காலத்தும் சாவாது. இவ்வுடம்பு ஒளி உடம்பாய் இன்பமே தருவதாம் என்பாராய், “என்றும் சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம்” என அறிவுறுத்துகின்றார். மா - பெருமை. பெருமை பொருந்திய சுத்த சன்மார்க்கம் “மாவுறாச் சுத்த சன்மார்க்கம்” எனப்படுகிறது. உறா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உற்ற என்பது பொருள். இதனால் சுத்த சன்மார்க்க நன்னெறியை மேற்கொள்ளாதவர்களின் தொடர்பு வேண்டா என்பதாம். (106)
|