5402. பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.
உரை: உலகத்தில் வாழ்பவர்களே! செறிந்த மலங்களின் பிணிப்பையுடைய புழுக்கள் நிறைந்த இவ்வுடம்பு ஞானம் பொருந்திய சுத்த சன்மார்க்கத்தை மேற்கொள்ளுவதால் அழிவில்லாத நித்தியப் பொருளாய்விடும் என்று யாம் உரைப்பது சத்தியம் சத்தியம் என அறிவீர்களாக. எ.று.
பொத்துதல் - செறிதல். மலப்பிணிப்பு - மலங்களின் சம்பந்தம். புழுக் குரம்பை - சிறுசிறு புழுக்கள் நிறைந்த உடம்பு. திருவருள் ஞான நெறியில் இயங்குவதாதலால், “சித்தியல் சுத்த சன்மார்க்கம்” என்று கூறுகின்றார். சேர்ப்பு - சேர்க்கை; ஈண்டு மேற்கொள்ளுதல் குறிக்கும். சத்தியம் - உண்மை. (107)
|