New Page 5
கொச்சகக் கலிப்பா
5403. வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
உரை: ஞான வானமாகியும் அவ்வானத்தின் நடுவே ஒளிர்கின்ற ஞான ஒளியாகியும் அதன்கண் கூத்தாடுபவனாகியும் சன்மார்க்கங்களின் உள்ளத்தின்கண் இருந்து இனிமை செய்கின்ற தேனும் தெள்ளமுதுமாய் இனிக்கின்ற தேவதேவனே! நீ நானாகி மகிழுமாறு என் உள்ளத்தில் வீற்றிருக்கின்றாய்; இதனை யான் என்னென்று சொல்லுவேன். எ.று.
வானம் என்பது பூதமாகிய வானமன்று. சிதாகாசம் என்பது ஞான ஆகாசத்தில் ஞானப் பிரகாசமாய் விளங்கி அதன் நடுவே நின்று கூத்தாடும் பெருமான் என்பதுபற்றி, “ஒளியாகி அதில் ஆடுவானாகி” என்று புகல்கின்றார். சன்மார்க்கர் - சன்மார்க்க நெறி பெற்று வாழ்பவர். உள்ளினித்தல் - உள்ளத்தில் தேனூற நின்று மகிழ்வித்தல். உயிர்க்குயிராய் நிற்றல் பற்றிச் சிவனை, “நீ யானாகி என்னுள் இருக்கின்றாய்” என்று வியக்கின்றார். (108)
|