5404. ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
உரை: ஞானத்திற்கு இடமாகிய சுடர்ப்பொருளே! ஞானமாகிய மணிவிளக்கே; அமையாத அருள் நிறைந்த பெரிய சிற்றம்பலத்தின்கண் ஆனந்தமாகிய தேனும் அமுதமும் பொழியும் சிவ பரம்பொருளே! நீ நானாகி என் உள்ளத்தில் கூத்தாடி அருளுகின்றாய்; இதனை என்னென்று கூறுவது. எ.று.
ஞானாகரன் - ஞானத்துக்கு இருப்பிடம். ஞான ஒளி திகழும் விளக்கு போல்வதால் சிவனை, “ஞான மணிவிளக்கு” என்று சிறப்பிக்கின்றார். ஆனா அருள் - நிறைந்த அருள். முன்னே “யானாகி என்னுள் இருக்கின்றாய்” என்றாராகலின், இங்கே அப்பெருமான் உள்ளமாகிய அம்பலத்தில் நடித்தருளுகின்றான் என விளக்குகின்றார். (109)
|