5405.

          என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
          முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
          நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால் மேவுபசும்
          பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.

உரை:

     அழகிய பொன்னம்பலத்தில் நடித்தருளுபவனே! என் நிலைமைக்குப் பொருந்தாத எண்ணங்களைக் கொள்கின்றேனாயினும் அவற்றை முதன்மை நிலைமையில் நின்று எல்லாவற்றையும் எனக்கு முடித்து கொடுக்கின்றாய்; ஆகவே நின்னுடைய சிறப்பியல்பை என்னென்று சொல்லுவேன்; நின்னுடைய இடப்பாகத்தில் இருந்தருளும் உமாதேவியின் சிறப்பியல்பை என்னென்று புகழ்வேன். எ.று.

     இடப்பாகத்தே உறைபவள் உமாதேவியாயினும் அவளைப் பெண்ணாம் இயல்பு பற்றி, “இடப்பால் மேவும் பசும்பொன்” என்று கூறுகின்றார். என் நிலைமைக்கு மேலான எண்ணங்களை எண்ணுகின்றேனாயினும் அவற்றையும் புறக்கணிக்காமல் முன்னிலையில் நின்று முடித்துத் தருகின்றாய் என விதந்து கூறுவாராய், “என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்; முன் தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்” என்று மொழிகின்றார். பொற் பொது - பொன்னம்பலம்.

     (110)