5407.

          ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
          தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
          வாங்குஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
          பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.

உரை:

     உயர்ந்த அன்பர்கள் எல்லாரும் மனைக்குள்ளே விழித்துக் கொண்டிருக்க, ஒரு புறத்தே ஒதுங்கி உறங்கிக் கிடந்த என்னை எழுப்பித் திருவருளாகிய தூய பொருளை நான் தரப் பெற்றுக்கொள்க என்று என்பால் வலிய வந்து கொடுத்து என் பக்கத்தே இருந்து ஞான அமுதத்தையும் என்னை உண்பித்தாய்; உன்னுடைய பண்பு இதுவாகும். எ.று.

     அன்பர்கள் விழித்திருக்கவும் ஒருபால் ஒதுங்கி உறங்கியிருந்த என்பால் வந்ததும் திருவருளாகிய ஞானப் பொருளை நல்கியதும் என் பக்கத்தே இருந்து ஞான அமுதத்தை எனக்கு ஊட்டியதும் நின்னுடைய சிறப்புடைய பண்பாம் என்று உணர்கின்றேன் என்பாராய், “நின் பண்பு இதுவே” என்று பாராட்டுகின்றார்.

     (112)