5408. நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னைஇங்கே
கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
உரை: உலகில் உனக்கு அன்பராயினார் எல்லாரும் நாள்தோறும் நின் திருவருளைச் செய்தருளுக என்று போற்றி வணங்கி நிற்க, ஆளப்படும் வகையில் மெய்யன்பு ஓர் அணுவளவும் இல்லாதவனாகிய எனக்கு நெடிதாகிய திருவருள் அமுதத்தை நீ எனக்குக் கொடுத்தருளினாய்; இங்கே உனக்கு மேலானவர் ஒருவருமில்லை என்று கீழானவனாகிய என்னை அருள் பெற்ற மேலோன் ஆக்கினை. எ.று.
பார் - உலகம். ஆட்பார் என்றவிடத்துப் பார் என்றது தன்மைப் பொருள் உணர்த்தி நின்றது. நீட்பு - நெடுமை. திருவருளாகிய ஞான அமுதம் அருளமுதம் எனப்படுகிறது. தட்டிக் கேட்பதில்லாத தலைவனாதலால் கீழோனாகிய என்னை அருள் பெற்ற மேலோனாக்கினாய் என்ற கருத்துப்பட, “கேட்போர் இலை என்று கீழ் மேலது ஆக்கினை” என்று கூறுகின்றார். (113)
|