5409. எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.
உரை: எங்கள் பெருமானே! எல்லா மக்களுக்கும் பொதுவாக அம்பலத்தில் நின்று அருள் கூத்தாடுகின்றவனே! எல்லார்க்கும் கடையவனாய் இருந்த எனக்கு உனது திருவருளைப் புரிந்து எல்லா மக்களுக்கும் துணைவனாய் இருக்க வைத்துள்ளாய்; இவ்வாறு எல்லார்க்கும் செய்யாமல் இருப்பது யாது கருதியோ? இதனை எனக்குச் சொல்லி அருளுவாயாக. எ.று.
எல்லோர்க்கும் கீழ்மகனாக இருந்த என்னை உனது திருவருளால் எல்லோர்க்கும் சமநிலையில் வைத்துத் துணைபுரிய வைத்திருக்கின்றாய் என்பாராய், “அருள்புரிந்து எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய்” என்று போற்றுகின்றார். உயர்ந்தவர் தாழ்ந்தவர், செல்வர் வறியர், ஆடவர் பெண்டிர், இளையர் முதியர் என்று நிலவும் எல்லார்க்கும் பொதுவிடமாகிய அம்பலத்தில் ஆடல் புரிகின்றாய் என்று புகழ்வாராய், “எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய்” என்று புகழ்கின்றார். எல்லார்க்கும் பொதுவிடத்தே இருப்பதுபற்றி என்னையும் பிறரையும் சமநிலையில் வைத்தருளுகின்றாய் என்பதாயின், இச்செயலை எல்லா மக்களுக்கும் செய்யாமல் இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை என்பாராய், “இவ்வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்தோ இசை எனக்கே” என்று வேண்டுகின்றார். இசைத்தல் - சொல்லுதல். (114)
|