5410. நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
உரை: நானாகியும் சிவமாகிய தானாகியும் நானும் தானுமாகியும் விளங்குகின்ற எம்பெருமான் தேனாகவும் தெள்ளிய அமுதமாகியும் என் உள்ளத்தில் தித்தித்து நிற்கின்றான்; அப்பெருமான் ஆகாசமாகிய அழகிய ஞான அம்பலத்தில் ஆடுகின்ற தலைவனாய் என் உள்ளத்தில் இருந்து இன்பம் செய்கின்ற கோமானாய் விளங்குகின்றான். எ.று.
உயிராதலும் உயிர்க்குயிராதலும் உடனாதலும் சிவனுக்கு இயல்பாதல் பற்றி, “நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான்” என்று கூறுகின்றார். தில்லையம்பலத்தில் ஞானவானமாய் ஆடி அருளுகின்றான்; ஆடி அருளுகின்ற பரமன் எல்லா உயிர்களுக்கும் தலைவனாவான் என்றற்கு, “மணி மன்றில் ஆடுகின்றான் கோனானான்” என்று கூறுகின்றார். கோமான் - தலைவன். (115)
|