கட

கட்டளைக் கலித்துறை

5411.

          எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
          வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
          நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
          கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.

உரை:

     கொல்லாமையாகிய விரதத்தில் நிலைபெற்று இருக்குமாறு என்னைக் குறிக்கொண்டு நிறுத்திய சிவனே! உனது கருணையாகிய அமுதத்தை உண்டுக் குறைகளெல்லாம் நீங்கி உனது இனிய திருவருளை எய்தினேன்; அதனால் உலகில் வல்லவர் எல்லார்க்கும் வல்லவனாயினேன்; அதனோடு நல்லவர் எல்லார்க்கும் உபகாரம் செய்வதற்கு உன் திருமுன் வருகின்றேன். எ.று.

     சடைமுடியும் முக்கண்ணும் எண்டோளும் வெண்ணீறணிந்த மேனியும் உடைய திருவுருக் கொண்டு விளங்குவதால் சிவனை, “கோலத்தனே” என்று குறிக்கின்றார். கோலம் என்றது சிவக்கோலம். கொல்லா விரதம் - எந்த உயிர்களையும் எக்காலத்தும் எவ்வகையாலும் கொல்லாமை. உனது இனிய திருவருளைப் பெற்றதனால், “எல்லாக் குறையும் தவிர்ந்தேன்” என்றும், அத்திருவருள் ஆற்றலால் “கருணை மருந்தருந்தி வல்லாரின் வல்லவனானேன்” என்றும், அத் திருவருள் செல்வத்தை உடையவன் ஆனதால், “நல்லார் எவர்க்கும் உபகரிப்பான் இங்கு நண்ணுகின்றேன்” என்றும் உரைக்கின்றார். அமுதம் சாவா மருந்தாதலால் அதனை, “மருந்து” என்று பலவிடத்தும் எடுத்துரைக்கின்றார்.

     (116)