5412. முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
உரை: என் உள்ளத்தின்கண் என்னுடைய ஆசை வடிவாய் உள்ள சிவபெருமானாகிய அப்பனைக் கண்டுகொண்டேனாதலால் நான் முற்காலத்தில் செய்த புண்ணியம் யாதோ? தெரிகிலேன்; இந்நாளில் உலகத்தார் பலரும் என்பால் வந்து இன்பமடைய நான் உயர்ந்தோங்கி நான் எண்ணியபடியே எனது இவ்வுடம்பு எக்காலத்தும் சாவாத இயற்கையைப் பெற்றுவிட்டது. எ.று.
மிகப் பலர் வள்ளலார்பால் வந்து அளவிளாவித் திருவருள் ஞானம் பெற்று இன்பம் துய்த்தமையை எண்ணி மகிழ்கின்றாராதலால், “உலகம் முழுதும் இந்நாள் என்பால் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினேன்” என்றும், அதனோடு தாம் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றமை புலப்பட, “எண்ணியவாறு இவ்வுடம்பு எந்நாளும் இறவாத இயற்கை பெற்றேன்” என்றும் இயம்புகின்றார். எந்நாளும் இறவாத உடம்பு பெற்றேன் என்பது தமது தூல உடம்பே மாறிப் பொன்னிற உடம்பாய் நிலைபேறு கொண்டதோ? என்று நினைக்கத் தூண்டுகிறது; இப்பேற்றுக்குக் காரணம் காண்பவர், “முன்னாள் செய்புண்ணியம் யாதோ” என மொழிகின்றார். தமது திருவுள்ளத்தில் இறைவனைக் கண்டதினால் வள்ளலார்க்கு என் நினைவுகள் உண்டாயினவோ என எண்ணச் செய்கிறது. (117)
|