5413. கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
உரை: திருச்சிற்றம்பலத்தில் இறைவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தைக் கண்டேன்; கண்டு மகிழ்ச்சி கொண்டேன்; காணப் பெற்ற எல்லாம்வல்ல சுத்தனாகிய பெருமானைக் கூடி இன்புற்று அவனருளும் ஞான அமுதத்தை உண்டு மெய்ம்மையான ஞானத் திருவுருவத்தைப் பெற்றுப் பொய்யான உலக ஒழுக்கத்தினின்றும் நீங்கினேன்; இது சமரச சன்மார்க்க ஞானம் பெற்றதினால் விளைந்த வியத்தகு காட்சியாகும். எ.று.
தில்லையம்பலத்தில் சிவபெருமான் ஆடுகின்ற திருக்கூத்து, “ஆனந்தக் கூத்து” என்று சான்றோர்களால் புகழப்படுதலின் அதனை, “சிற்றம்பலத்து ஆனந்த நாடகம்” என்று தெரிவிக்கின்றார். எல்லாம் வல்லவனாய்க் காண்போர் சித்தத்தின்கண் குடிகொண்டு மகிழ்விப்பவன் என்பது கொண்டு, “சித்தனைக் கூடிக் குலவி அமுதுண்டேன்” என்றும், திருவருள் ஞானம் பெற்ற நிலையை, “மெய்ஞ்ஞான உருவடைந்தேன்” என்றும் இயம்புகின்றார். உலகில் காணப்படும் சாதி சமய ஆசார விகற்பங்கள் பலவும் பொய்யாதல் கண்டு உள்ளத்தே வெறுப்புற்றமையின், “பொய் உலக வொழுக்கம் விண்டேன்” என்று விளம்புகின்றார். சமரச சன்மார்க்கக் கொள்கையால் உயர்ந்தவர்கள் தில்லையின் கூத்தப் பெருமானைக் கண்டு மகிழ்ந்து ஞானிகளாய் உலகியல் ஒழுக்கத்தின் பொய்ம்மை யுணர்ந்து அவற்றைக் கைவிடுகின்றமை தோன்ற, “இது சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு” என்று உரைக்கின்றார். வியத்தகு காட்சியும் ஞானமும் செயலும் “வியப்பு” எனத் தொகுத்துரைக்கப்படுகின்றன. (118)
|