5414. கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே
பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
தென்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.
உரை: விரிந்த இடங்கொண்ட பூவுலகில் எல்லாரும் சன்மார்க்கத்தில் கலந்து கொண்டு பண்ணமைந்த பாடலில் வைத்துப் பாடிப் பலரறிய படித்துப் பரவுகின்றார்கள்; விண்ணளாவிய சிற்சபை ஒன்றே எங்கும் நிறைந்து விளங்குகின்றது; தெளியக் கூறுகின்ற மற்றைய மதங்கள் யாவும் மறைந்தொழிகின்றன. எ.று.
சமரச சன்மார்க்கத்தின் சிறப்பையும், எதிர்காலத்தில் அது விளக்கமுறும் மேம்பாட்டையும், பூவுலக மக்கள் சன்மார்க்க நெறியில் மகிழ்ந்து இன்புறுவதையும் கவிக் கனவில் கண்டு இலங்குகின்றாராதலால், “பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டு பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்” என்றும், ஞான சபை ஒன்றே நிலை பெற்று விளங்குகிறது என்பாராய், “சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது” என்றும், சமரச உணர்வில்லாத மற்ற சமயங்கள் நிலையின்றி மறைகின்றன என்றற்கு, “மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே” என்று வடலூர் வள்ளலார் இதனால் எடுத்துரைக்கின்றார். (119)
|