5415. தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
உரை: முற்றிய தேங்காயைத் திருகிப் பிழிந்த பாலுடன் சர்க்கரைச் சாறும் நன்கு அளிந்த வாழைப்பழமும் பசுவின் நெய்யும் மணம் கமழும் தேனும் கலந்து பொன்னிறப் பலாச்சுளையும் மாம்பழம் முதலிய இனிய பழங்களும் பிழிந்து வடித்து ஒன்றுபட அளாவி இது அருளார் அமுது என்று சொல்லி ஒன்றை ஏழையாகிய எனக்குத் தந்தருளினாய். எ.று.
தாழைப் பழம் - முற்றிய தேங்காய்; இது நூல்களில் தெங்கம்பழம் என்றும் வழங்கும். சர்க்கரைச் சாறு - சர்க்கரைப் பாகுமாம். அளிந்த வாழைப்பழத்தில் நெய்போல் சாறு பெறப்படுதலால், “அளிந்த வாழைப்பழம்” என்று கூறுகின்றார். மாழை - பொன். இங்கே கூறிய வகையால் செய்துகொள்ளப்பட்ட சுவைப் பொருளாகிய ஒன்றை அருளார் அமுது என்று சொல்லி எனக்கு அளித்தருளினாய் என்பாராய், “ஆதி வடித்தளவி அருளாரமுது என்று ஒன்றை ஏழைக்கு அளித்தனையே” என்று விளம்புகின்றார். இது நல்கும் சுவை போல்வது அருளார் அமுது என்பது கருத்துப் போலும். (120)
|