5416. தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
உரை: தென் திசையை நோக்கி ஆடுகின்ற தேவதேவனே! செவ்விய தேனில் சிறந்த பசுவின் பாலைக் கரந்து அளியக் கனிந்த முக்கனிகளின் சாற்றைப் பிழிந்து அன்புடன் மன மகிழ்ந்து மகனே என்னிடம் வருக என்று என்னை அழைத்து நின் திருவருளாகிய அமுதென்ற ஒன்றை எனக்குத் தந்தருளினாய். எ.று.
தென் திசையை நோக்கி நின்றாடுகின்றமை பற்றி, “தென்பால் முகம் கொண்ட தேவே” என்று வள்ளற் பெருமான் எடுத்துரைக்கின்றார். இதற்கு முனிவர்கள் சூழக் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருக்கின்ற தட்சிணாமூர்த்தி என்பதும் உண்டு. முக்கனி - வாழை, மா, பலா ஆகிய மூவகைக் கனிகள். அருளார் அமுதென்ற ஒன்றை இது போல்வதெனத் தந்தமை தோன்ற, “அருளார் அமுதென்ற ஒன்றை என்பால் அளித்தனை” என்று உரைக்கின்றார். (121)
|