5417.

          செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
          ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
          சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
          இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

உரை:

     என் முன் செத்தவர்கள் உயிர் பெற்று எழுகின்றனர்; சுத்த சன்மார்க்கம் சிறந்து விளங்குகின்றது; தனக்கு ஒத்தவரும் உயர்ந்தவரும் இல்லாத சிவபெருமானாகிய முதல்வனை எண்ணி அடைந்து சித்து விளையாட்டினைச் செய்கின்றேன்; சாவாத வரமும் நன்கு பெற்றுக் கொண்டேன்; ஆகவே இவ்வுலகத்தின்கண் எனக்கு நிகராவார் யாவர் உளர் என்று திடமாகச் சொல்லுவேன். எ.று.

     ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமான் சிவனாகிய ஒரு முதல்வனாதலால், “ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவன்” என்று உரைக்கின்றார். சித்தாடுதல் - அரிய செயல்களைச் செய்தொழுகுதல். இத்தாரணி - இந்த நிலவுலகம். இதுவும் கவிஞன் காணும் கனவு வகை.

     (122)