கல
கலி நிலைத் துறை
5418. கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
உரை: அந்தி நிறத்தைப் பொருந்திய திருமேனியையுடைய சிவபெருமானே! ஒள்ளிய ஒளி வீசுகின்ற அழகிய மண்டபத்தின்கண் அடியவனாகிய நான் மெய்ப்பொருள் விளங்கக் கண்ணாரக் கண்டு மகிழ்கின்றபோது எனக்குப் பெருமானாகிய நீ உனது பெரிய கடலில் பிறந்த அமுது போன்ற திருவருளை நல்கினாய்; அப்பொழுது மலர்ந்த தாமரை மலர் போன்ற உனது திருவடியைத் தந்தருளினாய்; இனி எனக்கு ஒரு குறையும் இல்லையாம். எ.று.
ஒருகாலத்தே தேவர்கள் பெரிய கடலைக் கடைந்தபோது அதன்கண் எழுந்த அமுதத்தை, “பெருங் கடலமுது” என்று குறிக்கின்றார். இறைவனது திருவருளும் இந்த அமுதுபோல் இனித்தலின், “கருணையாம் பெருங் கடலமுது” என்று பாராட்டுகின்றார். தருண வாரிச மலர் - அப்பொழுது மலர்ந்து புதிதாகிய அழகிய தாமரை மலர். அருணம் - அந்தி மாலையில் விளங்கும் சூரியனது அழகிய ஒளியை ஒத்த மேனியை உடையவனாதலால் சிவனை, “அருண வண்ணன்” என்று அறிவிக்கின்றார். பொருள் எனப் பொதுப்பட கூறுதலால், பொருள் என்றது மெய்ப்பொருள் மேலதாயிற்று. நயப்பு - விளக்கம். (123)
|