எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5419.

     முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
          முன்னர்நீ தோன்றினை அந்தோ
     அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
          அப்பனே அய்யனே அரசே
     இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
          என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
     எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
          கெய்துதற் குரியமெய்த் தவமே.

உரை:

     முன்பொருநாள் திருவருள் எய்துமோ என அஞ்சி நான் உள்ளம் அயர்ந்து கிடந்தேனாக, அப்பொழுது என் முன்பு மகனே, நீ அயர்வு கொள்ளாதே என்று சொல்லிக்கொண்டு என் முன் தோன்றிக் காட்சி தந்தருளினாய்; அந்நாள் முதல் நான் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன்; எனக்கு அப்பனும் ஐயனும் அருளரசுமாய் இருப்பவனே! இந்த நாளிலும் என்னை வருத்துகின்ற கவலைகள் இடர்ப்பாடுகள் அச்சம் முதலிய எல்லாக் குற்றங்களும் என்னை விட்டு நீங்குமாறு அருள் புரிந்தாய்; இவ்வுலகில் செய்தற்குரிய மெய்ம்மையான தவத்தை எக்காலத்தில் செய்தேனோ? இப்பொழுது நான் பெற்றிருப்பது பெரிய பேறாகும். எ.று.

     முன்பொருகால் தோன்றித் தனது இனிய காட்சியை வழங்கியதனால் மகிழ்ச்சியோடு இருக்கின்ற நான் இப்பொழுது மனக்கவலையும் அச்சமும் இன்றி இருக்கின்றேன் என்பாராய், “இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திடப் புரிந்தாய்” என்று கூறுகின்றார். தாம் பெற்றது பெரியதொரு பேறு என்றற்கு, “இப்பெரும் பேறு” என்றும், இது பெரிய தவம் செய்தார்க்கன்றி எய்தாது என்பாராய் “எந்த நாள் புரிந்தேன் இப்பெரும் பேறு எய்துதற்குரிய மெய்த்தவம்” என்றும் விளம்புகின்றார்.

     (124)