5420. வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
மலத்திலே கிடந்துழைத் திட்ட
நாய்க்குயர் யதவிசிட் டொருமணி முடியும்
நன்றுறச் சூட்டினை அந்தோ
தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
சோதியே நின்பெருந் தயவைத்
தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
தயவும்உன் தனிப்பெருந் தயவே.
உரை: வாயால் குறும்பான சொற்களைச் சொல்லி வீண்பொழுது கழித்து அழுக்கிலே கிடந்து வருந்திய என்னைக் கிழ்ப்பட்டதாகிய ஒரு நாய்க்கு உயர்ந்த ஆசனமிட்டு அதன் தலையில் ஒரு அழகிய முடி அணிந்தது போல மிகவும் சிறப்பித்தாய்; ஐயோ! தூய குணங்களால் நிறைந்த பெரியவர்கள் புகழ்கின்ற அழகிய அம்பலத்தின்கண் அருட்சோதியே உருவாக உடைய பெருமானே! உன்னுடைய பெரிய திருவருளைத் தாய்ம்மைக்குரிய பேரருள் என்று நினைப்பேனோ; தாயினுடைய பேரருளும் உனது ஒப்பற்ற பெரிய அருளன்றோ? எ.று.
தம்முடைய கீழ்மையையும் இறைவனது அருளின் உயர்வையும் புலப்படுத்தற்கு, “வாய்க் குறும்புரைத்துத் திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட நாய்க்கு உயர் தவசிட்டு ஒரு மணிமுடியும் நன்றுறச் சூட்டினை” என்று விளங்க உரைக்கின்றார். தூய்க் குணத்தவர்கள் - மனத்தாலும் செயலாலும் தூய்மை உடையவர்கள். இறைவன் புரிந்த திருவருள் ஒரு தாயின் திருவருள் போன்றது என எண்ணினவர், தாய்க்கு அமைந்த அருளுணர்வு தானும் இறைவன் அருளால் அமைந்தது என்பதே நினைந்தருளுகின்றாராதலால், “தாய்க்குறு தயவென்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனிப்பெருந் தயவே” என்று சாற்றுகின்றார். தவிசு - ஆசனம். (125)
|