5421.

     பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
          பெருமநின் தன்னைஎன் றனக்கே
     சாருறு தாயே என்றுரைப் பேனோ
          தந்தையே என்றுரைப் பேனோ
     சீருறு குருவே என்றுரைப் பேனோ
          தெய்வமே என்றுரைப் பேனோ
     யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
          யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.

உரை:

     பெரிய துன்பத்தை நீக்கி மிக்க திருவருள் புரிந்த பெருமானே! உன்னை எனக்குரிய தாயென்று சொல்லுவேனோ? தந்தையென்று சொல்லுவேனோ? சிறப்புடைய ஞானகுரு என்றும் தெய்வம் என்றும் சொல்லுவேனோ? உன்னைய யார் என்று உரைப்பேன்; என்ன சொல்லிப் புகழ்வேன்; யாதொன்றும் அறிகிலேன்; எ.று.

     பேரிடர் - பெருந் துன்பம். தன்னைப் பெற்ற அன்புடைய தாய் என்றற்கு, “சாருறு தாய்” என்று குறிக்கின்றார். ஞானத்தால் சிறப்புடைய குருபரன் என்பது விளங்க, “சீருறு குரு” என்று செப்புகின்றார்.

     (126)