5422. சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
தீமன மாயையைக் கணத்தே
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
உற்றசா றட்டசர்க் கரையும்
நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
ஞானமன் றோங்கும்என் நட்பே.
உரை: ஞான சபையின் உயர்ந்து விளங்குகின்ற இனிய நட்பாகியவனே! கீழ்மை நெறியின்கண் என்னை ஈர்த்துச் சென்ற கொடிய தீயமனம் விளைவிக்கும் மயக்கத்தைக் கணப்பொழுதில் பயனில்லாத தாக்கி என்னையும் தடுத்தாண்டருளிய மெய்யனே! மிக்க மணம் கமழும் தேனும் அமுதும் மெல்லிய கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றைக் காய்ச்சிப் பெற்ற சர்க்கரையும் மணம் பொருந்திய நெய்யும் கலந்து உளதாகிய சுவை பொருந்திய பெரிய பழம் போல்பவனே! உன்னுடைய திருவருளை என்னவென்று புகழ்வேன். எ.று.
தேனும் அமுதும் சர்க்கரையும் நெய்யும் கலந்து உளதாகும் பெரும் பழம் உலகில் இன்மையின் இது அபூத உவமை. உலகியற் கீழ்மைச் சிற்றின்ப நெறியைச் “சிறுநெறி” என்று செப்புகின்றார். உலகியல் மாயைக்கு எளிதில் இரையாகித் தீது நிறைந்த கொடிய செயல்களில் ஈடுபடுவதால், “கொடிய தீமன மாயை” என்று கூறுகின்றார். வெறுவிய தாக்குதல் - பயனில்லாததாகச் செய்தல். சுவை மிகுந்த தேனை “உறுநறுந்தேன்” என்று உரைக்கின்றார். நண்புருவாய சிவனை “நட்பு” என மொழிகின்றார். முற்றிய கரும்பாயினும் எளிதில் முறியும் இயல்புடைமை பற்றி, “மென்கரும்பு” என இசைக்கின்றார். ஞானமன்று - ஞான சபை.. (127)
|