5423. புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
பொய்ம்மன மாயையைக் கணத்தே
மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
வல்லிஎன் அம்மை மகிழமன் றோங்கும்
வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
சொல்லிய பதியே மிகுதயா நிதியே
தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
உரை: கொடி போன்ற மெல்லிய அம்மையாகிய உமாதேவி கண்டு மகிழுமாறு அம்பலத்தின்கண் உயர்ந்தோங்குகின்ற வள்ளலாகிய சிவனே! வேதங்களும் ஆகமங்களும் புகழ்ந்தோதுகின்ற தலைவனே! மிக்க பெருந் தயாநிதியே! தொண்டனாகிய எனக்கு மெய்யான உயிர்த் துணைவனே! அற்பமாகிய உலகியல் நெறியின்கண் என்னை இழுத்து வருத்திய பொய்த்தன்மையை உடைய மனத்தின்கண் படிந்த உலகியல் மாயையை ஒருகணப் பொழுதில் மென்மை உடைய தாக்கி அது செலுத்தும் நெறியினின்றும் என்னைத் தடுத்து ஆண்டருளிய மெய்யனே! உனது திருவருளை எவ்வாறு புகழ்வேன். எ.று.
கொடி போன்ற இடையை உடையவளாதலின் உமையம்மையை “வல்லி” என்றும், வேண்டுவார் வேண்டும் வரங்களை வரையாது வழங்குவதால் சிவனை “வள்ளல்” என்றும் போற்றுகின்றார். தயாநிதி - தயவாகிய செல்வத்தை உடையவன். துன்பம் பயத்தலால் உலகியல் சிற்றின்ப நெறியை, “புல்லிய நெறி” என்று புகல்கின்றார். உலகியல் மாயை மிக்க விலக்குதற்குரிய வன்மை உடையதாகலின் அதனை மென்மை உடையதாக்கித் தடுத்து என்னை ஆண்டு கொண்டார் என்பதற்கு, “மெல்லியதாக்கித் தடுத்து என்னை ஆண்ட மெய்யனே” என விளம்புகின்றார். இறைவனது கருணை அளப்பரும் பெருமை உடையதாதலால், “நின் கருணை என் புகல்வேன்” என்று கூறுகின்றார். நீங்காது உடனுறைவது பற்றிச் சிவனை, “உயிர்க்கு மெய்த்துணை” என்று உரைக்கின்றார். (128)
|