5424.

     அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
          அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
     இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
          என்னையோ என்னையோ என்றாள்
     திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
          திருஉரு அடைந்தனன் ஞான
     மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
          வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.

உரை:

     அரிய தவத்தையுடைய பெரியவர்கள் காண்பதற்கரிய பெருங் கருணையையுடைய அருட்பெருஞ் சோதியாகிய இறைவன் என் மனத்தின்கண் எழுந்தருளி இருப்பதால் நான் செய்த தவத்தின் பெருமையை என்னென்று சொல்லுவேன்; திருந்திய தெளிந்த அருள் ஞான அமுதம் உண்டுக் குற்றமெல்லாம் போக்கிய சிவஞானத் திருவுருவை நான் அடைந்து விட்டேன்; மேலும் கிடைக்குமாயின் ஞானமாகிய மருந்தும் மணியும் நிறைந்த மந்திரமும் எனக்குக் கைவந்தனவாம் என்றும் மொழிகின்றார். எ.று.

     இது தலைமகள் திருவருள் பேற்றால் தான் அடைந்த வேறுபாட்டை தாய்க்கு உரைத்ததாக நற்றாய் அதனைக் கொண்டெடுத்து மொழிந்ததாம். தலைவனாகிய பெருமான் தன் உள்ளத்து எழுந்தருளி இருப்பதை வியந்து, “நான் செய்த தவந்தான் என்னையோ என்னையோ” என்றும், தான் ஞானத் திருவுரு பெற்ற சிறப்பைத் “தெள்ளமு துண்டு அழிவெலாம் தவிர்த்த திருவுரு அடைந்தனன்” என்றும் தலைவி கூறுகின்றாள். மகள் வேறுபாடு கண்டு நற்றாய் முதலியோர் மணி மந்திர மருந்துகளால் அவ்வேறுபாடு நீக்க முயன்றமை, “ஞான மருந்தும் மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன” என்றதனால் புலப்படுகின்றது.

     (129)