5425.

     இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
          என்உயிர்க் கமுதமே என்தன்
     அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
          அருள்நடம் புரியும்என் அரசே
     வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
          மடிந்தன விடிந்ததால் இரவும்
     துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
          சூழலில் துலங்குகின் றேனே.

உரை:

     இன்பத்திலே விளங்குகின்ற சிவபரம்பொருளே! என்னுடைய உயிர்க்கு அமுதமாய் விளங்குபவனே! என்னுடைய அன்பிலே தோன்றிப் பழுத்த ஒப்பற்ற பெரும் பழமே! திருவருள் ஞான நடம் புரிகின்ற கூத்தப் பெருமானே! கொடுமையிலே தோன்றிய உலகியல் மாயையும் கன்மமும் தமது செயல் கெட்டு ஒடுங்கி விட்டன; என்னைச் சூழ்ந்து நின்ற அஞ்ஞானமாகிய இருளும் போய் ஒழிந்தது; நானும் துன்ப மில்லாதவனாய் அருட்பெருஞ் சோதி நிலவு இன்பச் சூழலில் இருந்து மகிழ்கின்றேன். எ.று.

     இன்பமே சிவத்தின் திருவுருவாதல் பற்றி, “சிவபரம்பொருளே” என்றும், அன்பே சிவம் என்பது பற்றி, “அன்பிலே பழுத்த தனிப் பெரும் பழமே” என்றும், உயிரறிவை மறைத்துக் கொடுமையும் துன்பமுமே விளைவிப்பது பற்றி அஞ்ஞான மாயை கன்மங்களை, “வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன” என்றும், துன்பவிருள் நீங்கியது என்றற்கு, “இரவும் விடிந்ததால்” என்றும் இயம்புகின்றார். துன்பத்திற் கேதுவாகிய மாயை முதலியன நீங்கிய வழி அருள் ஞான விளக்க வாழ்வே தமக்கு எய்தினமை தோன்ற, “இனி நான் அருட்பெருஞ் சோதிச் சூழலில் துலங்குகின்றேனே” என்று சொல்லுகின்றார்.

     (130)