5426.

     உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
          ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
     செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
          சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
     மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
          மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
     பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
          பாடுகின் றேன்பொதுப் பாட்டே.

உரை:

     உயிர் வகைகளுக்கெல்லாம் ஒப்பற்றவனாகிய நீ திருக் கூத்தாடும் ஒப்பற்ற அம்பலம் என அறிந்து கொண்டேன்; குற்றமெல்லாம் நீங்கினேன்; அருட் செல்வமெல்லாம் பெற்றேன்; சித்துக்கள் எல்லாவற்றையும் செயல் வல்லது பரம்பொருளாகிய ஒன்றென உணர்ந்து கொண்டேன்; அவ்வுணர்வால் உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்து பூரித்து உள்ளமனைத்தும் கனிந்துருகப் பெற்று மலர்ச்சி யுற்றேன்; சுத்த சன்மார்க்கமாகிய இளம் பயிர்கள் எல்லாம் தழைக்கவும் அது நிலவும் இடமெல்லாம் மகிழுமாறு திருச்சிற்றம்பலத்துக்குரிய பாட்டுக்களை இனிது பாடுகின்றேன். எ.று.

     திருப்பொது - சிவபெருமான் நடம் புரியும் அம்பலம். செயிர் - குற்றம். திரு என்றது அருட் செல்வத்தை. அரிய செயல்கள் எல்லாவற்றையும் இனிது செய்யவல்லது சிவபரம்பொருள் ஒன்றே என்பதை உணர்ந்தேன் என்பாராய், “சித்தெலாம் வல்லது ஒன்று அறிந்தேன்” என்று கூறுகின்றார். சன்மார்க்க ஞானம் எங்கும் பரவிப் பெருக வேண்டும் என்பது வள்ளலார் விருப்பமாதலால், “சுத்த சன்மார்க்கப் பயிர் எல்லாம் தழைக்கப் பதி எல்லாம் களிக்கப் பொதுப் பாட்டு பாடுகின்றேன்” என்று புகழ்கின்றார். அம்பலமாகிய பொதுவைச் சிறப்பித்துப் பாடும் பாட்டு “பொதுப் பாட்டு” எனப்படுகின்றது.

     (131)