5427.

     படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
          பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
     பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
          பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
     வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
          வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
     நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
          நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.

உரை:

     நான் படித்த படிப்பும், கேட்ட கேள்வி அறிவும், இவற்றின் பயனாகிய தெளிவுணர்ச்சியும், அடியவனாகிய யான் கைப்பற்றி உள்ள நிலைமையும், உயிரும் மெய்யின்பமும் பெருமையும் சிறப்பும், நான் உண்ணுகின்ற வடித்த தெளிந்த அமுதும், விளங்குகின்ற மெய்ம்மையான வாழ்வும், வாழ்க்கைக்கு முழுமுதலாகிய சிவஞானமும், அம்பலத்தில் நடிக்கின்ற இறைவன் திருவடியும், திருச்சிற்றம்பலத்தே பொருந்திய சிவபரம்பொருளுமாம் என்றறிந்து கொண்டேன். எ.று.

     படிப்பும் கேள்வியும் இரண்டின் பயனால் விளையும் உண்மையறிவும் நன்னிலையும் உயிரன்பும் மெய்யின்பமும் முதலிய பிறவும் அம்பலத்தில் நடிக்கின்ற திருவடியும் அவற்றையுடைய பரம்பொருளுமாம் என உணர்ந்தமை கருத்தாம் என அறிக.

     (132)