5428.

     கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்
          கடவுளே என்இரு கண்ணே
     நிலையனே ஞான நீதிமன் றிடத்தே
          நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
     புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி
          பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
     சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ
          திருவருட் பெருந்திறல் பெரிதே.

உரை:

     எல்லாக் கலைகளையும் உருவாக உடையவனே! எல்லாம் வல்லதாகிய ஒப்பற்ற தலைமைக் கடவுளே! என்னுடைய இரண்டு கண் போன்றவனே! சிவபோக நிலையை உடையவனே! ஞான உருவாகிய நீதி நிலவும் அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற கருணை உருவாகிய பெரிய செல்வமே! புலைத் தன்மையை யுடைய எளியேன் பொருட்டுத் திருவடி நிலத்தில் பொருந்த விளங்கிய புதுமையை என்னென்று சொல்லுவேன்; கல்லொத்த மனத்தை யுடைய யான்செய்த பெரிய தவமோ? அல்லது நினது திருவருள் ஆற்றலின் சிறப்பு நிலை பெரிதோ? யாது என்று புகல்வேன். எ.று.

     பெருமானே! எளியேன் பொருட்டுத் திருவடி நிலம் தோயக் காட்சி தந்து அருளியதற்குக் காரணம் எனது தவமோ? நினது திருவருளின் போராற்றலோ? அறிகிலேன் என்பது கருத்து. கலைகள் பலவற்றிற்கும் பொதுவாய் நிற்கும் கலை யுருவினனாக நிற்பது பற்றி, “கலையனே” என்று கூறுகின்றார். நிருத்தம் - கூத்து. சிலையை நேர் மனம் - கல்லை ஒத்திருக்கும் மனம் என்பதாம்.

     (133)