5429.

     தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
          தனிமுதல் பேரருட் சோதிப்
     பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
          பராபர நிராமய நிமல
     உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
          உளத்ததி சயித்திட எனக்கே
     வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
          மாகடற் கெல்லைகண் டிலனே.

உரை:

     தன்மை பிறரால் அறியப்படாத தலைவனே! மூன்றாகிய கண்களை யுடைய ஒப்பற்ற முதல்வனே! பெரிய அருளொளி பரப்பும் பரம்பரனே! ஞான மயமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிகின்ற பராபரனே! துன்பமில்லாத தூயவனே! வன்மை மிகவுடைய பிரமன், திருமால் முதலிய பெரிய தேவர்கள் எல்லோரும் கண்டு அதிசயிக்குமாறு எனக்கு நல்ல வரங்களைத் தந்தருளுகின்றாய்; வள்ளலாகிய சிவனே! உனது திருவருளுக்கு யான் ஒரு எல்லை காண முடியாதவனாக உள்ளேன். எ.று.

     தரம் - தன்மை. இந்தத் தன்மையன் என்று பிறரால் அறியலாகாது உயர்ந்த தலைவன் எனப்படுவது பற்றி, “தரம் பிறரறியாத் தலைவ” என்றும், “தனிமுதல்” என்றும் சிவனைப் புகழ்கின்றார். பெரிதாகிய அருளொளி கொண்டு மேன்மேலும் உயர்ந்து திகழ்வது பற்றி, “பரம்பர” என்று போற்றுகின்றார். பராபரன் - மேன்மையும் கீழ்மையும் உடையவன். நிராமயன் - பரம்பொருளாகிய சிவபெருமான். நிமலன் - மலம் இல்லாதவன். திருவருள் மேன்மேலும் விளங்குதல் தோன்ற, “நின் கருணை மாகடற்கு எல்லை கண்டிலேன்” என இயம்புகின்றார்.

     (134)