5430. யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
ஒளிஉருக் காட்டிய தலைவா
ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
உரை: அருட்பெருஞ் சோதியாகிய என்னுடைய அருளரசே! எனது உடம்பும் மனமும் உருகுமாறு என்னைத் தெளிவித்து உன்னுடைய ஒளி உருவைக் காட்டிய தலைவனே! இப்பொழுது நீ என்பால் மனம் இரங்கவில்லை என்று முறையிட்டேன்; என் முறையீட்டின் ஓசை அடங்குவதன் முன்னே ஈன்ற பசு அன்போடு தன் கன்றை அணைத்துக் கொள்வதுபோல என்னை எடுத்து ஏன்று கொண்டாய்; இச்சிறப்புக்கு யான் என்ன பெரிய தவம் செய்தேனோ? யான் யாது சொல்வேன். எ.று.
இறைவனது அருளொளி கண்டாரது உடம்பையும் உள்ளத்தையும் உருகச் செய்தலின், “ஊன் மனமுருக என்னைத் தேற்றி ஒளி உருக்காட்டிய தலைவா” என்று உரைக்கின்றார். ஆன் - கன். ஈன்ற பசு தான் ஈன்ற கன்றினிடத்தே பேரன்பு செய்யும் இயல்பினதாகலான், “ஆன் மகிழ் கன்றை” எடுத்துக் காட்டுகின்றார். (135)
|