5431.

     பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்
          பரம்பரம் தருகின்ற தென்றோர்
     தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்
          தமியனேன் உண்டனன் அதன்தன்
     இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ
          என்னுயிர் இனித்ததென் கரணம்
     சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்
          தனித்தனி இனித்தன தழைத்தே.

உரை:

     தந்தையாகிய பெருமான், என்னுடைய அச்சத்தை எல்லாம் போக்கி எல்லாம் வல்ல சித்துடையவனாக்கி மேன்மையைத் தரவல்லது என்று சொல்லி ஒப்பற்ற ஒரு பழத்தைத் தந்தருளினான்; தனியவனாகிய நானும் அதனை உண்டேன்; ஆயினும் அதனுடைய இனிப்பை நான் என்னென்று சொல்லுவேன்; அஃது என்னுடைய உயிரையும் என்னுடைய கரணங்களையும் சலிப்பின்றி இனிக்கச் செய்தது; தத்துவங்கள் முப்பத்தாறும் இன்பம் தழைத்துத் தனித்தனியே இனித்தன. எ.று.

     பரம்பரம் - மேன்மை. தமியனேன் - தனியவனாகிய நான். மனம், சித்தம், அகங்காரம், புத்தி ஆகிய நான்கும் சலிப்பின்றி உண்டு மகிழ்ந்தன என்பாராய், “என் கரணம் சனிப்பற இனித்த” என்று கூறுகின்றார். சனிப்பு - சலிப்பு.

     (136)