5432. விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
விளைந்தது விளைந்தது மனனே
கண்ணெலாம் களிக்கக் காணலாம்
பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
உரை: விண்ணுலகங்கள் எல்லாம் கலந்து பரந்திருக்கும் பரவெளியில் இன்பம் விளைந்தது; மனோதத்துவம் முழுவதும் இன்பம் விளைந்தது; கண் முதலிய கருவிகளெல்லாம் கண்டுகளிக்க இன்பம் மிகுந்தது; அப் பரம்பொருளை அம்பலத்தில் ஆடுகின்ற கடவுளே என்று நம்முடைய மனத்தில் நினைக்கலாம்; நினைத்ததை எழுதலாம்; எழுதித் துதிக்கலாம்; பன்முறையும் எடுத்து மகிழ்ச்சியுடன் உண்ணலாம்; விரும்பினவர்க்கும் அதனைத் தந்து உதவலாம்: இனி உலகில் உயர்ந்து ஓங்கலாம். எ.று.
விண்ணுலகங்கள் எல்லாவற்றையும் தன்கண்கொண்டு விளங்குவது சிவ பரவெளியாதலால் அதனை, “விண்ணெல்லாம் கலந்த வெளி” என்று கூறுகின்றார். ஆனந்தம் தருகின்ற பரம்பொருளை மனோ தத்துவத்தின்கண் இன்பம் விளைக்க உணர்ந்து இன்புற்றது போலக் கண் முதலிய கருவிகள் எல்லாவற்றாலும் இன்பம் சுரக்கக் காணலாம் என்றவர் அதனை, “கருத்தில் எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்து உண்ணலாம் பிறர்க்கு உதவலாம்” என்றும், அதனால் “உலகின்கண் ஓங்கி உயரலாம்” என்றும் உரைக்கின்றார். (137)
|