5433. வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
வாரியைக் கண்டனம் மனமே
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
ஆடலாம் அடிக்கடி வியந்தே
உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
ஓங்கலாம் உதவலாம் உறலாம்
கள்எலாம் உண்டவண்டென இன்பம்
காணலாம் களிக்கலாம் இனியே.
உரை: வளவியதாகிய கருணை உருவான அம்பலத்திலே எழுந்தருளும் அமுதக் கடலாகிய சிவத்தை நாம் கண்டு கொண்டோம்; மனமே, இனி அதனை எடுத்து அள்ளிக் கொள்ளலாம்; அதன் புகழைப் பாடி ஆடலாம்; அதனை அடிக்கடி வியந்து உள்ளமெல்லாம் நிறைய உண்ணலாம்; பிறர்க்கும் உதவலாம்; அதனால் உலகில் உயர்ந்தோங்கலாம்; தேனையுண்ட வண்டுபோல இன்பமுறலாம்; பலகாலும் கண்டு களிக்கலாம். எ.று.
வள்ளல் என்றது வண்மை குறித்து நின்றது. அம்பலத்திலே எழுந்தருளுகின்ற சிவபெருமானே “அமுத வாரி” என்று கூறுகின்றார். வாரி - கடல். உள்ளமெல்லாம் நிறைந்து குளிர உண்ணலாம் என்றற்கு, “உள்ளெலாம் நிரம்ப உண்ணலாம்” என இயம்புகின்றார். வண்டென இன்பமுறலாம் காணலாம் களிக்கலாம் என இயையும். (138)
|