5434. சனிதொ லைந்தது தடைத விர்ந்தது தயைமி குந்தது சலமொடே
துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது சுபமி குந்தது சுகமொடே
கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது களிமி குந்தது கனிவொடே
புனித மன்றிறை நடம லிந்தது புகழ்உ யர்ந்தது புவியிலே.
உரை: தூய அம்பலத்தின்கண் இறைவனுடைய திருக்கூத்து சிறப்புற நடைபெறுதலால் உயிர்களை வருத்திய சனி ஒழிந்தது; தடைகளெல்லாம் நீங்கின; அருளுணர்வு எங்கும் நிரம்பியது; எவ்விடத்தும் வஞ்சனையும் வெறுப்பும் ஒழிந்தன; சுமையாயிருந்த துன்பமும் நீங்கிற்று; இன்பங்கள் எல்லாம் உண்டாயின; அருளாகிய கனிகள் எங்கும் பழுத்தன; இடர் செய்யும் களைகள் எல்லாம் நீங்கின; உள்ளக் கனிவோடு எங்கும் இன்பநிலை பரவி விட்டது; இறைவன் புகழே உலகெங்கும் உயர்ந்துள்ளது. எ.று.
துன்பம் செய்யும் பொருள்களைச் சனி என்று சலித்துக் கூறும் மரபு பற்றி, “சனி தொலைந்தது” என்று சாற்றுகின்றார். சலம் - வஞ்சனை. துனி - வெறுப்பு. சுபம் - மங்கலச் செயல்கள். புனித மன்று - தூய பொன்னம்பலம். (139)
|