5435.

          உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
          பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
          புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
          திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றுவி ழுந்ததே.

உரை:

     புகழும் ஒளியும் மெய்யுணர்வும் உண்மையாக உண்டாகி விட்டன; அருட் சத்தியும் சத்தி மானாகிய சிவமும் சிவபதமும் எய்திவிட்டன; இவ்வாற்றால் பற்றி நின்ற குற்றங்களும் குறைகளும் புலைத் தன்மையும் கீழ்மை புரிந்த மறைக்கும் திரைகளும் நரை திரைகளும் நீங்கி ஒழிந்தன. எ.று.

     உரை - புகழ். உணர்வு என்றது மெய்யுணர்வாகிய சிவஞானத்தை. பரை என்றது சிவசத்தியைக் குறிப்பதால் சத்திமானாகிய சிவத்தைப் பதி என்றும் சிவபோகத்தைப் பதம் என்று பகர்கின்றார். புரை - குற்றம். புன்மைசேர் திரை - கீழ்மையை விளைவிக்கும் தடையைத் திரையென்று குறிக்கின்றார். வயோதிகத்தைக் குறிப்பதற்கு நரையும் திரையும் எடுத்துரைக்கின்றார்.

     (140)