எண

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5436.

     அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
          ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
     உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
          ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
     எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
          என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
     செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
          சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.

உரை:

     தில்லையம்பலத்தே ஆடல் புரிந்தருளும் அரிய அமுதமே! அருளரசே! பெரிய இன்பக் கடல் போல்பவனே! அறிவுருவாகியவனே! என்னுடைய அன்பனே! தேவர்களுக்குமன்றி இந்த மண்ணுலகில் உள்ளவர்களுக்கும் அருள் செய்யும் பொருட்டு விளங்குகின்ற ஒளிப் பொருளே! உனது மெய்ம்மைத் தன்மையை நன்குணர்ந்த ஞானிகட்கு உறவாகியவனே! எம்மிடத்தே உயர்ந்த தேவனாகி எனக்கு எழுபிறப்பும் நல்ல துணைவனாய் என் உள்ளத்தின்கண் விளங்குகின்ற என்னுடைய இறைவனே! செவ்விய நினது திருவடி மலரைக் கண்டு கொண்டேனாதலால் என்பால் உள்ள சிறுமைகள் எல்லாம் நீங்கி மெய்ம்மையான சிவஞானச் செல்வத்தைப் பெற்றேன். எ.று.

     உலகவர் அனைவருக்கும் அருளொளி நல்குபவனாதலால், “உம்பர் கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள்வான் ஒளிர்கின்ற ஒளியே” என்றும், சிவஞானிகனை “மெய்யுணர்ந்தோர்” என்றும் கூறுகின்றார். எம்பலம் - எம்மிடம். தேவு - தேவன். பிறப்பு எழுவகை எனப்படுதலால், “எழுமை” எனக் குறிக்கின்றார். திருவடித் தாமரைகளைச் “செம்பதத்தே மலர்” எனச் சிறப்பிக்கின்றார். மலப் பிணிப்பால் குற்றங்கள் பல நிறைந்திருப்பது பற்றித் தாமுற்ற சிறுமையைச் “சிறுமை யெல்லாம்” என்று எடுத்துரைக்கின்றார். இதனால், இறைவனுடைய திருவடித் தாமரையைக் கண்டு சிறுமை யெல்லாம் நீங்கினமை யுரைக்கின்றார்.

     (141)