5437. அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே
சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
உரை: திருவடிகள் விளக்கமுறப் பொருந்துமாறு பொற்சபையில் தனித் திருக்கூத்தாடுகின்ற அருட் சுடரே! என் உயிர்க்குப் பொருத்தமான பெரிய துணைவனே! உடுக்கை இருந்து விளங்குகின்ற கையையுடைய சோதி மலையில் எழுந்தருளும் மருந்தாகியவனே! சொற்களின் எல்லை எல்லாம் கடந்த ஞானச் சொரூபத்தையுடைய பரம்பொருளே! திருநீற்றின் ஒளி திகழும் திருமேனியை உடைய புண்ணிய மூர்த்தியே! ஞானப்பாலை யுண்ட ஞானசம்பந்தரை முத்துச் சிவிகையின் மேல் இருக்க வைத்த தூயவனே! பூமியின் மேல் வாழும் சிறியவனாகிய நான் உன்னுடைய திருவடித் தாமரைகளைக் கண்டு மகிழ்ந்தேனாதலால் துன்பங்களினின்று நீங்கி நினது திருவருட் செல்வமாகிய பரிசினைப் பெற்றவனாயினேன். எ.று.
பொற்சபையின்கண் ஒரு திருவடியை ஊன்றியும் ஒரு திருவடியைத் தூக்கியும் ஆடுகின்ற உன்னுடைய திருக்கூத்தின்கண் அத்திருவடிகள் யான் இனிது காண விளங்கின என்பாராய், “அடி விளங்கக் கனக சபைத் தனிநடனம் புரியும் அருட் சுடரே” என்று போற்றுகின்றார். துடி - உடுக்கை. சொற்பதம் - சொற்களின் எல்லை. ஞானமே திருவுருவாகியவனாதலால் சிவனை, “சிற்சொருபப் பொருளே” என்று சிறப்பிக்கின்றார். ஞானப் போனகர் - சீர்காழியில் அம்மையால் அருளப்பெற்று ஞானப்பாலை உண்டமை பற்றித் திருஞானசம்பந்தரை, “ஞானப் போனகர்” என்று நவில்கின்றார். பரிவு - வருத்தம் (142)
|