5438. அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
உரை: அன்புடையவரும், எல்லாவற்றையும் தனக்கு உடைமையாகக் கொண்டவரும், அருட் பெருஞ் சோதியாய் என்னை ஆண்டு கொண்டவரும், என்னுடைய வலிதாகிய மனத்தை நன்மனமாக்கி என்னுடைய உயிரறிவின் வழி நிற்கச் செய்தருளிய அழகிய அம்பலத்தின்கண் எழுந்தருளுபவருமான சிவபெருமானே! எல்லா இன்பங்களையும் உடையவரே! எனக்கு இறைவரே! என்னுடைய இரண்டு கண்ணிலுமுள்ள கருமணிகளில் கலந்து இருக்கும் பெருமானே! என்பால் வந்து என்னை அருளால் தூக்கி எடுத்தாண்டீராதலால் இவ்வருட் செயலை எண்ணுகின்றேன்; எண்ணும்போது உள்ளத்தில் சுரக்கின்ற இன்ப அமுதத்தை உண்டு மகிழ்கின்றேன். எ.று.
அன்பே சிவம் என்பவாதலின் சிவனை, “அன்புடையவரே” என்று துதிக்கின்றார். அறிவு வழி நில்லாமல் பொறி வழிச் சென்று இணக்கமின்றித் திரிதலால் தமது மனத்தை, “வன்புடைய மனம்” என்று மொழிந்து பின்னர் அது பொறிகளின் நீங்கி உயிர் அறிவின் வழி ஒழுகுமாறு செய்தமை விளங்க, “நன்மனமாக்கி எனது வசம் செய்வித்தருளிய மணி மன்றத்தவரே” என்று புகழ்கின்றார். உலகியல் வழிச் சென்று அதன் மயக்கத்தில் மூழ்கிக் கிடந்த என்பால் அருள் கொண்டு என்னை எடுத்து அருள் நெறியில் நிறுத்தினீர் என்று உரைப்பாராய், “என்புடை எனைத் தூக்கி எடுத்தீர்” எனவும், இவ்வருட் செயலை நினைந்து நினைந்து இன்புறுகின்றேன் என்பாராய், “எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே” எனவும் உவகை மிகுந்து ஓதுகின்றார். (143)
|