5439. கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
துலக்கம் உற்றசிற் சிற்றம்பலத் தமுதே
தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
உரை: பொன்னம்பலத்தில் எழுந்தருளும் நன்கு கனிந்த செங்கனி போல்பவனே! விளக்கம் பொருந்திய சிற்றம்பலத்தில் பெறப்படும் அமுதமே! தூய சோதிப் பொருளே! சுகத்தைத் தருகின்ற பெரிய வாழ்வாகியவனே! விலக்கப்படுதற் கில்லாத தனிமுதலாகிய அருளரசே! வேதங்களாலும் ஆகமங்களாலும் உயர்வாகப் பேசப்படும் மெய்ப்பொருளே! துன்பமில்லாத மெய்யன்பர்களின் திருவுள்ளத்தில் இருந்தருளும் சச்சிதானந்தமாகிய சிவமே! கலக்கமெல்லாம் போக்கிக் கொண்டேன்; ஆதலால் நான் உன் திருவருளில் களித்து மகிழ்கின்றேன். எ.று.
சிற்றம்பலம் - ஞானசபை. சித்தம்பலம் என வரற்பாலது சிற்றம்பலம் என வந்தது. பெருவாழ்வை நல்குவதாதலால் சிவ பரம்பொருளை, “பெருவாழ்வே” என்று போற்றுகின்றார். தனிமுதற் பரம்பொருளாதலால் யாராலும் எல்லாவற்றாலும் விலக்கலாகாமை தோன்ற, “விலக்கல் இல்லதோர் தனிமுதல்” என விளம்புகின்றார். அலக்கண் - துன்பம். சத்தும் சித்தும் ஆனந்தமுமாதலால், “சச்சிதானந்த சிவமே” என்று சாற்றுகின்றார். (144)
|