5440.

     ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
          உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
     ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
          இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
     ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
          தவர்தானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
     ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் ஆங்கே
          உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.

உரை:

     பிரணவமாகிய இருக்கையின் மேல் நான் இருந்தபோது மகிழ்வோடு என்னுடைய மணவாளராகிய சிவபெருமான் தமது பொன் போற் சிவந்த வடிவத்தின் நீங்கி இவ்வுலகில் கிடைக்கும் பளிங்கின் வடிவு கொண்டு என் எதிரே நின்றாராக, இருந்தருள்க என்று சொல்லிக் கொண்டே எழுந்தேன்; அப்பொழுது அவர் நீ எழுந்திருப்பது ஏன்? உன்னுடைய ஆங்காரத்தை ஒழிப்பாயாக என்றார்; யானும் அஃது ஒழிந்தே அவர் எதிரே நின்றேன்; அப்போது அவர் நானோ நான் அவரோ எனக் குறிப்பறியேன் ஆயினேன்; அவ்விடத்து இரண்டுருவும் ஒன்றானோம்; அந்நிலையில் நான் பெற்ற அனுபவம் எங்கும் நிறைந்த பெருவெளியாயிற்று காண். எ.று.

     அகர உகர மகரங்கள் ஆகிய பிரணவ நிலையை, “ஓங்கார அணை” என உரைக்கின்றார். அஃதாவது, பிரணவாகார யோகத்தில் நான் இருந்தபொழுது சிவமாகிய மூர்த்தத் திருமேனியின்றிச் சத்துவாகாரத்தில் சிவ பரம்பொருள் எழுந்தருளினமை எடுத்துக் கூறுவாராய், “எனது மணவாளர் சிவந்த வடிவகன்று பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார்” என்று உரைக்கின்றார். ஆங்காரம் என்றாரேனும் மமகாரமும் உடன் கொள்ளப்படும். ஈங்கு ஊங்கு என்பன சுட்டுப் பொருள்பட நின்றன. அகங்கார மமகாரங்கள் அற்றவிடத்துச் சீவன் சிவமாதலை இஃது உணர்த்துகின்றமையின், “இரண்டு உருவும் ஒன்றானோம்” எனத் தெரிவிக்கின்றார். “யான் எனதென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்ற திருக்குறள் கருத்தைத் தன்னுட் கொண்டிருப்பது காண்க.

     (145)