5441. சொல்லுகின்றேன் பற்பலநாள் சொல்லுகின்ற வெல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான்
உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
உரை: இனிய மொழிகளைப் பேசுபவளே; நான் பலவற்றைச் சொல்லுகின்றேன்; நான் சொல்லுபவை எல்லாம் குற்றம் உடையவை அல்ல; சூதும் உடையவை அல்ல; தூய்மை உடையனவாகும்: அவையாவும் பெருமானாகிய தலைவர் என்னுள் இருந்து சொல்லுவனவாதலால் அவை பொருள் நிறைந்த மெய்வார்த்தைகளேயன்றிப் பொருளில்லாத வெறும் வார்த்தைகளை என் வாய் சொல்லுவதில்லை; போகிற போக்கில் இந்நாளிலேயே நீ அதனை யறிந்து கொள்வாய்; அப்போது என்னையும் நீ நன்கு அறிந்து கொள்வாய்; இயன்ற வகையெல்லாம் நானும் சொல்லுகின்றேன்; அது முக்காலும் உண்மையாகும். எ.று.
எனது தலைவருடைய சிறப்பை நான் தூய சொற்களால் பலகாலும் சொல்லுகின்றேன் என்பாளாய், “பற்பல நான் சொல்லுகின்றேன், சொல்லுகின்ற எல்லாம் துரிசலவே சூதலவே தூய்மை யுடையனவே” என்று வற்புறுத்துகின்றாள். வெல்லுகின்ற வார்த்தை - பொருள் நிறைந்து மெய்ம்மை சான்ற சொற்கள். வெறும் வார்த்தை - பொய்யுரைகள். மெய்யே சொல்லிப் பயின்றது என்றற்கு, “என் வாய் வெறும் வார்த்தை விளம்பாது” என்றும், அதற்குக் காரணம் என் தலைவர் என்னுள்ளே இருந்து சொல்லுகின்றார்; அவருடைய சொற்களைத்தான் நான் உரைக்கின்றேன் என்பாளாய், “ஐயர் நின்று விளம்புகின்ற படியால்” என்றும் மொழிகின்றாள். தேமொழி - இனிய சொற்களைப் பேசுபவள்; அன்மொழித் தொகை. ஒல்லுகின்ற வகை - இயன்ற வகை. உண்மை இது என மூன்று முறை அடுக்கிக் கூறியது வன்புறை. (146)
|