5442. தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.
உரை: தந்தையினுடைய தன்மையையே மகனும் உடையவனாவான் என்று சொல்லுவது உண்மையாகும்; என் தந்தையும், எனக்குத் தலைவனும், படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்கின்ற இறைவனும், அம்பலத்தில் அழகிய திருக்கூத்தாடுபவனுமாகிய சிவ பெருமான், என்னைத் தன்னுடைய மகன் என்று ஆண்டு கொண்டான்; அவன் எல்லாம் வல்ல தலைவன் எனவும், நல்ல புகழுடையவன் எனவும், அருளுடையவன் எனவும், உண்மை ஞானம் உடையவன் எனவும், எனக்கு அப்பன் எனவும், அவனுடைய தன்மைகளெல்லாம் என்பால் உள்ள தன்மைகள் எனவும் அறிவீர்களாக. எ.று.
“தந்தையை ஒப்பர் மக்கள்” என்று தொல்காப்பியர் முதலியோர் கூறுவதால், “தந்தை தன்மையே தனையன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்” என்று உரைக்கின்றார். ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம். அம்பலத்தில் கூத்தாடும் பரமன் என்னைத் தனக்கு மைந்தன் என்று ஆண்டு கொண்டானாதலால், “என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறிமின்” என எடுத்துரைக்கின்றார். அந்தணாளன் - அழகிய அருளுடையவன். இதனால் என்பால் காணப்படும் தன்மைகள் யாவும் இறைவன் தன்மைகள் என்று உலகினர்க்கு உரைத்தவாறாம். (147)
|