அறுச

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5443.

     என்உடலும் என்உயிரும் என்பொருளும்
          நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
     உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
          றொன்றும்இலை உடையாய் இங்கே
     புன்னிகரேன் குற்றம்எலாம் பொறுத்ததுவும்
          போதாமல் புணர்ந்து கொண்டே
     தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென்
          கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ.

உரை:

     என் உடம்பையும் உயிரையும் என் பொருட்களையும் உன்னுடையவை; அப்பொழுது என்னை ஆண்டு கொண்ட பொழுதே உன்னிடத்தே மனமுவந்து கொடுத்துவிட்டேன்; அதனால் என்னிடத்தில் ஒன்றுமில்லை; நீ எல்லாம் உடையவன்; இவ்வுலகில் புல்லைப்போன்ற எளியவனாகிய என் குற்றமெல்லாம் பொறுத்துக்கொண்டது போதாமல் என்னுட் கலந்து கொண்டு தனக்கு நிகர் என்று வைத்து விட்டாயாதலால் இப்பொழுது உன்னுடைய தன்மையை வியந்து யான் யாது கொடுப்பேன். எ.று.

     நின்ன - உன்னுடையவை. என்னை நீ ஆட்கொண்ட போதே என்னுடைய உடல் உயிர் பொருள் யாவையும் உன்னுடையவை என்று கொடுத்து விட்டேனாதலால் இவற்றின் வேறாக என்னிடம் ஒன்றுமில்லை என்பது கருத்து; அங்ஙனமிருக்க என்னுடைய குற்றங்களைப் பொறுத்து என்னுட் கலந்து கொண்டு என்னையும் தனக்கு நிகராக வைத்தருளினாய்; நினது பெருந்தன்மைக்கு யான் யாது கொடுப்பேன் என்பாராய், “இஞ்ஞான்று என்கொடுப்பேன் நின் தன்மைக்கு” என்று உரைத்தருளுகின்றார்.

     (148)