5444.

     என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி
          சயந்தன்னை எம்ம னோர்காள்
     பொன்உரைக்கும் மணிமன்றில் திருநடனம்
          புரிகின்ற புனிதன் என்னுள்
     மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல்
          விளங்குகின்றான் மெய்ம்மை யான
     தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய்
          தருள்கின்றான் சகத்தின் மீதே.

உரை:

     பொன் வேயப்பட்ட அழகிய அம்பலத்தின்கண் திருக் கூத்தாடுகின்ற புனிதனாகிய கூத்தப்பெருமான் மின்னலைப் போல் என்னுள் புகுந்து கலந்து கொண்டு என்னிற் பிரியாமல் இருந்தருளுகின்றான்; அன்றியும் மெய்ம்மை நிறைந்த தன்னுடைய சொல்லுக்கும் உலகில் ஒற்றுமை அமையச் செய்தருளுகின்றான்; இந்த அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன். எ.று.

     பொன்னோடு வேயப்பட்டுப் பொன்மயமாய் விளங்குவதால் தில்லையம்பலம், “பொன் உரைக்கும் மணிமன்று” எனப்படுகின்றது. உலகத்துச் சான்றோர்களை, “எம்மனோர்” என்று போற்றுகின்றார். மின் உரைக்கும்படி கலந்தான் - மின்னல் தோன்றி மறைவதுபோல என்னுள் மறைந்தருளினான். மறைந்தவன் என்னைவிட்டு நீங்காமல் என்னுள் இருந்து கொண்டு எனதுரை தனதுரையாக அமைத்தருளுகின்றான் என்பதாம்.

     (149)