5445.

     ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
          மாளாத ஆக்கை பெற்றேன்
     கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
          நடுவிருந்து குலாவு கின்றேன்
     பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
          அன்பினொடும் பாடிப் பாடி
     நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
          எண்ணம்எலாம் நிரம்பி னேனே.

உரை:

     அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற இறைவன் திருவடிக்கு ஆளாகி இறவாத உடம்பைப் பெற்றுக்கொண்டேன்; நல்லோர்கள் கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தின் நடுவே இருந்து எந்தை பிரானாகிய சிவனுடைய திருவடிப் புகழை அன்போடு பலகாலும் பாடி உயர்கின்றேன்; மனத்தில் எண்ணுகின்ற இன்பமெல்லாம் நிறைந்து இன்பத்தால் கூத்தாடுகின்றேன். எ.று.

     கூத்தப்பிரான் திருவடிக்கு நான் ஆளானபடியால் அழியாத உடம்பு பெற்றுக்கொண்டேன் என்பாராய், “ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன்” என்று உரைக்கின்றார். குலாவுதல் - விளங்குதல். பதப் புகழ் - திருவடியின் புகழ். எண்ணிய எண்ணமெல்லாம் நிறைந்தபடியால் இன்பம் மிகுந்து கூத்தாடுகின்றேன் என்பது கருத்து. மாளாத ஆக்கை - அழியாத உடம்பு. நீடுதல் - உயர்தல்.

     (150)