5446.

     ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
          அருள்ஒளி தருகின்றோம்
     கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
          குறிக்கொள்வர் நினக்கேஎம்
     ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
          வாழ்கநீ மகனேஎன்
     றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
          இணைமலர்ப் பதம்போற்றி.

உரை:

     மகனே, எனது ஆணையாகக் கூறுகின்றேன்; நீ சிறிதும் அஞ்ச வேண்டா; உனக்குத் திருவருள் ஞான ஒளியைத் தருகின்றோம்; அதனால் கோணையான நெறிகள் பொருந்திய பெரிய நிலத்தில் வாழ்பவர் எல்லாரும் நின்னையே குறிக்கொண்டு போற்றுவர்; உனக்கே எம்முடைய அம்பலத்து அருளரசையும் தந்துள்ளோம் என்று யாம் பெருமைபெற எனக்குத் திருவருள் புரிந்த நின்னுடைய இரண்டாகிய தாமரை மலர் போன்ற பாதங்களைப் போற்றுகின்றேன். எ.று.

     கோணை மாநிலம் - நேரில்லாத நெறிகள் நிறைந்த பெரிய நிலவுலகம். திருவருள் ஞானத்தால் பெறலாகும் வாழ்வை, “அம்பலத்தரசு” என்று குறிக்கின்றார். ஏனை - பெருமை; இஃது ஏண் எனவும் அடங்கும். இணைப் பதம் - இரண்டாகிய திருவடி. இத் திருப்பாட்டைப் பாடிய காலமும் இடமும் காரணமும் விளங்கவில்லை.

     (151)